சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 14) மாலை வெளியான நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நீர் மேலாண்மையில் அதிமுக அரசு சிறந்து விளங்குகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.
அடுத்து கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் தேசிய விருதை பெற்றுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருதை பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் நிலவிய மின்வெட்டை, முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்று மூன்றே ஆண்டுகளில் நிவர்த்திசெய்தார். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றினார்.
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 லட்சம் இளைஞர்களுக்கு அதிமுக அரசு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
இளைய சமுதாயத்துக்கு விஞ்ஞான ரீதியிலான அறிவுப்பூர்வ கல்வி கிடைக்க மாணவர்களுக்கு ஜெயலலிதா அரசாங்கம் கணிணி வழங்கியது. ஏழை பெண்களுக்கு தங்கத்துக்கு தாலி வழங்குகிறோம். கூட்டுறவுத் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் வீடுகளுக்கு இலவசமாக 6 சிலிண்டர்கள் வழங்கப்படும்.
நாட்டு மக்களுக்கு அதிமுக அரசின் திட்டங்கள் தொடரும்” என்றார். தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நாங்கள் சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.
ஏற்கனவே விவசாயிகள் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கியில் 6 சவரனுக்கு கீழ் அடமானம் வைத்துள்ள நகைகடன் தள்ளுபடி செய்யப்படும். இதேபோல் நாங்கள் அறிவித்த திட்டங்களை அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்” என்றார்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் தொடர்பான கேள்விக்கு, “எரிபொருள்கள் விலை கட்டுப்படுத்தப்படும்” என்றார். ஊழல் குறித்து பேசுகையில், “நாட்டில் ஊழல் மிகுந்த கட்சி திமுகதான். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீதான மீதான ஊழலை அவர்கள் எதிர்கொள்ளட்டும்” என்றார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்விக்கு, “ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் திமுகதான். ஜெயலலிதா மண்ணில் இருந்து மறைய கருணாநிதியும், முக ஸ்டாலினும்தான் காரணம். இதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஜெயலலிதா நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட போதும் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்து நெருக்கடி கொடுத்தார். உரிய சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி கொடுத்தார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை ஒருபோதும் மன்னிக்காது” என்றார்.