சென்னை: இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், "அடையாறு, கூவம் ஆகிய இரண்டு ஆறுகளைவிட கொசஸ்தலை ஆறு அதிக நீரை கொண்டுசெல்லும் திறன்கொண்டது. இந்த ஆறு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் கொண்டுசெல்லும் திறன்கொண்டது. தற்போது 50 ஆயிரம் கனஅடி நீர்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணூர், பழவேற்காடு சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துவருகின்றன. 2015ஆம் ஆண்டுக்கு முன்புவரை 2,000 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டன. அதன் பின்பு இதுவரை 600 ஏக்கருக்கும் மேற்பட்ட சதுப்பு நிலப்பகுதி ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சூழல் தொடர்பான கேடுகளை நமக்கு உணர்த்தும் வகையில், 2015 பெருவெள்ளம் அமைந்தது. இருப்பினும் அதன் பின்னும் அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக வட சென்னை, மேற்கு சென்னை, திருவள்ளூர், பொன்னேரி ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சேதம் ஏற்படும்.
இந்த ஆக்கிரமிப்புகளால், அப்பகுதியில் கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல், நிலத்தடி நீருடன் கடல் நீர் கலத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
எண்ணூர் பழவேற்காடு சதுப்பு நிலப்பகுதி ஒரு காலநிலை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் இதனை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். தவறினால், வட சென்னை, திருவள்ளூரில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர்.