தமிழ்நாடு

tamil nadu

சுற்றுச்சூழல் பிரச்னைகள்: இயற்கை மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம் - நித்யானந் ஜெயராமன் பேட்டி

"இயற்கை மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம். இயற்கை மீதான உறவையும் நாம் துண்டித்து விட்டோம்" என சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

By

Published : May 17, 2022, 8:20 PM IST

Published : May 17, 2022, 8:20 PM IST

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந் ஜெயராமன் நேர்க்காணல்
சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந் ஜெயராமன் நேர்க்காணல்

சென்னை:சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து ஈடிவி பாரத்திற்கு நித்யானந் பிரத்யேகப் பேட்டி அளித்தார். இதில், ’சென்னை நகரத்தில் பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்னைகள் உள்ளன எனக் கூறிய அவர், குறிப்பாக திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மைப் பிரச்னைகள் அதிகமாக உள்ளன’ என்றார்.

"மேலும் ஆறுகள் சாக்கடைகளாக மாறியிருக்கின்றன. வட சென்னையில் முக்கியமாக எண்ணூர், மணலியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் காற்று மாசுபாட்டை அதிகப்படுத்தி மக்களின் ஆரோக்கியமான வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது", என்ற அவர் 'நகர விரிவாக்கம்' என்ற பெயரில் இயற்கையை சீரழித்தது மட்டுமல்லாமல் நீர் ஆதாரங்களையும் இழந்துவிட்டோம் என வேதனை அடைந்தார்.

'இயற்கை மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம்':சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது, அரசுகள் கடல்நீரை குடிநீர்மயமாக்கும் நிலையங்களை (Desalination Plant) நிறுவி குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி வருகிறது. இந்த கடல்நீரை குடிநீர்மயமாக்கும் நிலையங்களை அமைப்பதன் மூலம் கடலில் மாசுபாடு ஏற்படுமா? என்ற கேள்விக்கு நித்யானந் பதில் கூறும்போது, "இது மாதிரியான திட்டங்களை செயல்படுத்தும்போது இயற்கை மீதான நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் எனவும், இயற்கை மீதான உறவையும் நாம் துண்டித்து விட்டோம் என்பதுபோல் தெரிகிறது.

குடிநீர்மயமாக்கும் நிலையங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சுகிறது. உதாரணமாக 10 லட்சம் மில்லியன் லிட்டர் நீரை உறிஞ்சும்போது, சுமார் 12 லட்சம் லிட்டர் கழிவு மற்றும் உப்பு நீர் கடலில் விடப்படுகிறது. இதனால் கடலில் மாசுபாடு அதிகரித்து கடல் உயிரினங்களுக்கு ஆபத்தாக உள்ளது" என விளக்கினார்.

சென்னையில் கட்டடங்கள் தான் அதிகம்:சமீபத்தில் சென்னையில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆண்டுதோறும் இது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இதற்கு என்ன தீர்வு என்ற கேள்விக்கு, "பொதுவாக குப்பைகளை முறையாகப் பிரித்து பெரிய ஆழம் உள்ள குழிகளில் குப்பைகளைக் கொட்ட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வது இல்லை. எனவே இந்தப் பிரச்னை அடிக்கடி எழுகிறது" என்றார்.

சென்னையில் காடுகள் அழிப்பு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு, "சென்னையில் காடுகள் மற்றும் மரங்களை விட (கான்கிரீட்) கட்டடங்கள் தான் அதிகம். மேலும், மியாவாக்கி காடுகள் என்ற பெயரில் மிக குறுகிய இடத்தில் மரங்களை நடுவதால் ஒரு பயனுமில்லை" என்ற சுற்றுச்சூழல் வல்லுநர், மியாவாக்கி காடுகள் என்ற திட்டம் ஒரு 'கண்துடைப்பு' என்றார். சென்னையில் உள்ள சாலைகளின் இரு பக்கங்களிலுமே கான்கிரீட் தான் அதிகமாக காணப்படுகிறது என வேதனைத் தெரிவித்தார்.

சென்னை நகர்ப்புற வெப்பத்தீவு:கிழக்கு கடற்கரை சாலை(ஈசிஆர்) விரிவாக்கத் திட்டம் போக்குவரத்துக்காக இல்லை எனவும், அதிக அளவில் கட்டடங்கள் இருந்தால் அரசுக்கு நல்ல வருமானம் என்பதால் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது எனக் கூறிய நித்யானந், இந்த திட்டம் ஈ.சி.ஆரின் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சீர்கேடு விளைவிக்கும் என்றார்.

சமீபத்தில் பருவநிலை மாற்றம் (Climate Change) மற்றும் புவி வெப்பமயமாதல் காரணத்தால்(global warming), இந்தியாவில் உள்ள வடமேற்கு மாநிலங்களில் உள்ள நிலப்பரப்பில் தட்ப வெப்பநிலையின் அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது வரும் காலங்களில் தமிழ்நாட்டைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டிற்கும் இது பொருந்தும். மேலும் சென்னை போன்ற நகர்ப்புறங்கள் 'நகர்ப்புற வெப்பத்தீவு' போல மாறலாம். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது", எனக் கூறியவர் இந்த கால கட்டங்களில் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகமாக உபயோகப்படுத்தும்போது, அதிலிருந்து வெளியேறும் சூட்டுக்காற்றும் காற்றின் மாசுபாட்டை அதிகப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் நேர்காணல்

”இந்த அரசு சுற்றுச்சூழலின் மீது அக்கறை செலுத்துகிறது. எனினும் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் சில காரணிகள் இருக்கின்றன" என்ற அவர் இந்த மண்ணை கெடுக்கிற எந்த ஒரு திட்டமும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து சர்வேஸ்வரனுடன் ஒரு நேர்காணல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details