சென்னை:போலாந்து நாட்டில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஸ் போட்டியில் 52 நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்திய நாட்டின் சார்பாக கலந்துகொண்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த ரிது வர்ஷினி என்ற 14 வயது சிறுமி தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்ற சிறுமிக்கு வரவேற்பு
இதையடுத்து, போலாந்து நாட்டிலிருந்து டெல்லி வந்த வில்வித்தை வீரர்களை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டினார்.
பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த ரிது வர்ஷினியை தமிழ்நாடு வில்வித்தை சங்கச் செயலாளரும் இந்திய வில்வித்தை பயிற்சியாளர்கள் இயக்குநருமான ஷிஹான் உசைனி உள்ளிட்ட வில்வித்தை வீரர்கள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஷிஹான் உசைனி, 'முதல் முறையாக உலக வில்வித்தைப் போட்டி போலாந்து நாட்டில் நடந்தது. அந்தப் போட்டியில் 14 வயது நிரம்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரிது வர்ஷினி உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்று திரும்பி வந்துள்ளார்.
இது இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கும் சாதனையாகும். ரிது வர்ஷினிக்கும், பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.