டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், சீன வீராங்கனை பிங் ஜியோவோவை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்ற பிவி.சிந்து நேற்று டெல்லி வந்தடைந்திருந்தார். இந்நிலையில், இன்று (ஆக.4) டெல்லியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார் பி.வி.சிந்து.
தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், சாட்ஸ் தலைவர் வெங்கடேஷ்வர் ரெட்டி, சைபராபாத் சிபி சஜ்ஜனார் ஆகியோர் நேரடியாக விமான நிலையம் சென்று பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்பான காணொலி பி.வி.சிந்து ஓர் முன்னுதாரணம்
வரவேற்புக்குப் பின்னர் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் பேசுகையில், “இந்தியாவிற்காக பி.வி. சிந்துவுக்குத் தங்கப்பதக்கம் கிடைக்க வேண்டும் என முழு இந்தியர்களும் பிரார்த்தனை செய்தனர். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு விளையாட்டுத் துறைகள், வீரர்களுக்கு முழு ஆதரவை அளித்து வருகிறது.
சந்திரசேகர் ராவ் அரசு தெலங்கானாவில் ஒரு விளையாட்டு கொள்கையைச் செயல்படுத்த இருக்கிறது. எதிர்காலத்தில் பி.வி. சிந்து அதிக பதக்கங்களைப் பெற வேண்டும் எனவும் அவர் விரும்புகிறார். எதிர்காலத் தலைமுறையினருக்கு பி.வி.சிந்து ஓர் முன்னுதாரணம்” என்றார்.
விமான நிலையத்தில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்களும், பி.வி.சிந்துவை உற்சாகத்துடன் வரவேற்றனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, “எதிர்காலத்தில் அனைவரின் ஆதரவுடன் இந்தியாவிற்காக அதிக பதக்கங்களைக் கொண்டு வருவேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. மாநில அரசு, விளையாட்டு வீரர்களை அதிகமாக ஊக்குவிக்கிறது" என்றார்.
இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்
பி.வி.சிந்துவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற காட்சி விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட பெரும் வரவேற்புக்குப் பிறகு, பி.வி.சிந்து, தனது பெற்றோர், பயிற்சியாளருடன் ஹதராபாத் பிலிம் நகரில் அமைந்துள்ள தனது வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே பி.வி. சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில், வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே ஒரு இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Gold or Silver: இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி; மிரட்டும் ரவிக்குமார்