தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா கற்றல் குறைபாட்டைப் போக்க "எண்ணும் எழுத்தும்" திட்டம் பயன்படும்!

கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளைப் போக்கும் வகையில், "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டிற்குள் மாணவர்கள் எழுதவும், படிக்கவும் கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ennum
ennum

By

Published : Jun 29, 2022, 5:51 PM IST

சென்னை: தொடக்கக்கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து புதியதாக செயல்படுத்த தொடங்கியுள்ள "எண்ணும் எழுத்தும்" திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நாம் பிறந்த நொடியிலிருந்து இறுதிநொடி வரை கற்றுக்கொண்டே இருக்கிறோம். நமது உலகைப் பற்றியும் சுற்றுச்சூழலைப் பற்றியும் நமது புலன்கள் மூலமாகவே அறிந்து கொள்கிறோம். குழந்தைகளும் சிறுவர்களும் தங்கள் புலன்கள் வாயிலாகவே உலகைப் புரிந்து கொள்கின்றனர்.

இதிலிருந்தே அவர்களின் கற்றல் பயணம் தொடங்குகிறது. அழுதால் உணவு கிடைக்கும், உதவி செய்தால் கைதட்டல் என்ற பாராட்டு கிடைக்கும் என தனது ஒவ்வொரு செயலுக்கும் பெறக்கூடிய எதிர்வினைகளில் இருந்து குழந்தை கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு புரியவைக்கவென்று ஒரு மொழி இருக்கிறது. அது மிக மிக எளிமையானது. இந்த எளிமை வரவில்லை எனில் குழந்தைக்கு நாம் சொல்வது புரியாமல் போய்விடும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் கற்றுக்கொள்ளும் முறை மாறுபடுகிறது. அதற்கேற்ப கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும். இயல்பாகவே குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் எதையாவது செய்து கொண்டும் இருப்பவர்கள்.

நான்கு அல்லது ஐந்து வயது குழந்தை, மணிக்கணக்கில் ஒரு மேசையில் அமர்ந்து ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமானதல்ல. இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு குழந்தையும் செய்து பார்த்து உணர்ந்து கற்பதற்கு ஏற்ற வகையில், வகுப்பறை செயல்பாடுகளால் நிறைந்திருக்க வேண்டும்.

பூஜ்ஜியம் முதல் 8 என்பது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கான முக்கியமான காலகட்டம். இக்காலக்கட்டத்தில் குழந்தைகள், விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர். மற்ற பருவங்களைவிட இப்பருவத்தில் அவர்களின் உள்வாங்கும் தன்மை சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு அல்லது செயல்பாடுகளே கற்றுக்கொள்ள உதவும். இதனடிப்படையில் கற்பித்தல் முறை அமைய வேண்டும்.

குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் ஏழு ஆண்டுகள் வரை குழந்தைகள் உணர்ந்து அனுபவித்து அறியும்"அனுபவ கற்றல்" நடைபெறுகிறது. அனுபவ கற்றல் மூலம் கற்றுக்கொண்டதை நெடுங்காலம் நினைவகத்தில் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கற்றுக்கொள்கிறது. சுதந்திரமாக, மகிழ்ச்சியாக, அனுபவங்களின்வழி கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சிறப்பான கற்றல் திறனுடையவர்களாக ஆகிறார்கள்.

இதற்கேற்ப விளையாட்டு வழி, செயல் வழி, தொட்டுணர், செயல்பாடுகள், பாடங்கள் கற்றுத் தரப்பட வேண்டும். மன அழுத்தமோ பயமோ இல்லாமல் மகிழ்ச்சியான முறையில் கற்றுக்கொண்டால்தான் குழந்தைக்கு எளிதில் பாடங்கள் புரியும்.

கல்வி முறையில் மாற்றம்

நமது கல்விமுறை முழுமையும் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். போட்டியின் அடிப்படையில் அல்லாமல், குழந்தைகளின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், அனுபவித்துக் கற்றுக்கொள்வதாக மாற வேண்டும். கற்றுக் கொண்டவை அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் வகையில் கல்வியின் குறிக்கோள் அமையவேண்டும். எனவே, குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை, ஆற்றலை உணரும் வகையில் பேசுதல், செயல்பாடுகள், கலை, கைவினைச் செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை. பாடல், கதை, வாசித்தல், பொம்மலாட்டம், படைப்பு மற்றும் பல செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கற்பித்தல் முறை தேவையாய் இருக்கிறது.

கரோனாவால் கற்றல் இழப்பு:கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தை 2021இல் இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே 2022ஆம் ஆண்டிற்குள் நுழைகிறது.

நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வருகையில் இந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை பள்ளி வகுப்பறையில் செய்ய வேண்டி இருக்கிறது. இணையவழி வகுப்புகள் நடந்திருந்தாலும், இணையம் மெதுவாக வேலை செய்யும் கிராமங்களில் பாடங்களைக் கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தன. அதுபோலவே, ஸ்மார்ட் போன்கள் இல்லாத குடும்பங்களும் உண்டு. அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மற்ற குழந்தைகளுடையதைவிட அதிகம்.

இந்தத் தேவையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டில் 1 முதல் 3 வகுப்புகளுக்கான "எண்ணும் எழுத்தும்" திட்டம் வடிவமைக்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. வரும் 2022-23ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படவிருக்கும் இத்திட்டத்தின் இலக்கு 2025-ல், 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பது தான்.

அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். செயல்வழியிலும் விளையாட்டு வழியிலும் குழந்தைகள் கற்றாலும், அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாகப் பிரித்து பாடங்களை கற்றுத் தருவதே இத்திட்டத்தின் அடிப்படை. குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மகிழ்ச்சியான கல்விச்சூழலை உருவாக்கவும் "எண்ணும் எழுத்தும்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details