ஒரு உயிர் உருவாகும்போதே அந்த உயிர் இன்ஜினியராகணும் முடிவு செய்யப்பட்ட தலைமுறைகள் 90ஸ் கிட்ஸ். பத்தாவது முடிச்சியா கண்ண மூடிட்டு ஒன்னு பயலாஜி க்ரூப்ல சேரு, இல்லையா கம்ப்யூட்டர் சைன்ஸ் க்ரூப்ல சேரு. ஏனா அப்பதான் இன்ஜினியராக முடியும்னு தாத்தா, அப்பா, அம்மா, அக்கா இப்படி எல்லோரும் அடுக்கடுக்கா ஆர்டர் போடுவாங்க. அதுல வியக்கத்தக்க விஷயம் என்னனா காதுகுத்து, கல்யாணத்துல பார்க்காத சொந்தமெல்லாம் கார்ல வந்து பையன இன்ஜினியராக்க இந்த 2 க்ரூப்ல சேருங்கனு போற போக்குல சொல்லிட்டு போய்டுவாங்க.
அதுக்கப்பறம் மேலே சொன்ன ரெண்டு க்ரூப்ல ஒன்னுல சேர்ந்து தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்னு வேற வேற க்ரூப்க்கு மனசு அலைபாய்ஞ்சு ஒருவழியா ப்ளஸ் டூல 700லேர்ந்து 900க்குள்ள மார்க் எடுத்துட்டா ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே சுத்துப்பட்டு ஊருக்குள்ள எந்த இன்ஜினியரிங் காலேஜ் நல்ல காலேஜ்னு விசாரிச்சு கவுன்சிலிங்குக்கு போலாமா இல்ல டொனேஷன்ல போலாமானு யோசிச்சு எதுக்கும் டொனேஷன முதல் ஆப்ஷனா வெச்சுக்குவோம் என யோசித்து ஆடு எப்படா தலையாட்டும்னு காத்திட்டு இருப்பாங்க.
பிளஸ் 2 ரிசல்ட் வந்ததும் ஆடு தலையாட்டுதோ இல்லையோ அந்த ஆட்ட இன்ஜினியர் காலேஜ்க்குள்ள தள்ள டொனேஷன் பணத்த ரெடி பண்ண அலைய ஆரம்பிப்பாங்க. ஆனா 90ஸ் ஆடோ ஆர்ட்ஸ நோக்கி பார்வைய திருப்பும். அந்தப் பார்வையை உடனடியாக குருடாக்க, ”நம்ம சித்தப்பாவோட வேலை பார்க்குறவரோட பையன் வெளிநாட்டுல இன்ஜினியரா வேலை பார்க்குறாரு. அவரோட கம்பெனில உனக்கு நாலு வருஷம் கழிச்சு கண்டிப்பா அம்பதாயிரம் சம்பளத்துல நல்ல வேலை வாங்கிக் கொடுப்பாருனு, சித்தப்பாவோட தூரத்து சொந்தங்க வண்டி கட்டிட்டுவந்து ஒரு வசனத்த தூவிட்டு போய்டுவாங்க. எதையுமே சொல்ல முடியாம அந்த 90ஸ் ஆடு அமைதியா இருக்க, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறினு இன்ஜினியர் காலேஜ்ல தள்ளிவிட்ருவாங்க.
அந்த ஆடும் வேற வழியில்லாம காலேஜ்க்குள்ள போனா அந்த ஆடு மாதிரியே ஆர்ட்ஸையோ, வேற எதையோ நோக்கி பார்வைய திருப்பிய சில ஆடுகளும் அங்க வந்து சேரும். அதுக்கப்புறம் வேவ் லெங்த் ஒத்துப்போக இந்த ஆடுங்க சேர்ந்துட்டு அரசியல் பேசும், சினிமா பேசும், ஷார்ட் ஃபிலிம் எடுக்கும், ஆல்பம் போடும். இதுனால அரியர்ஸ் வெச்சி, அட்டெண்டன்ஸ் லாக் ஆகி அட்மிஷன் அப்போ வந்த அப்பாவ செமஸ்டருக்கு செமஸ்டர் காலேஜ்க்கு வரவைக்கும். ஹெச்.ஓ.டி. ரூம்ல அவர் வறுத்தெடுக்க, வீட்ல அப்பா பொளந்தெடுக்க நாலு வருஷத்துல மூனு வருஷத்து அரியர நாலாவது வருஷத்துல க்ளியர் பண்ணிட்டு பெருமூச்சுவிட்டா அடுத்த கண்டம் நோ ட்யூஸ்.