சென்னை: கரோனா தொற்றின் காரணமாக, பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழிகாட்டுதலின் அடிப்படையில், கடந்தாண்டு கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
கரோனா காலத்தில் ஆன்லைன் தேர்வுகள்
அண்ணா பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வினாத்தாள்களை அனுப்பி விடைகளை மாணவர்கள் வீட்டில் இருந்து எழுதி அனுப்பும் முறையில் நடத்தியது.
அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன. எனவே அதனைத் தொடர்ந்து ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு (Online Exams) ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஆன்லைன் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு, மாணவர்கள் விடைகளைப் பார்த்து எழுதும் முறையில் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 2ஆம் அலையின் பாதிப்புக் குறைந்து வருவதால், செப்டம்பர் முதல் உயர் கல்வி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
இதனடிப்படையில், இனி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கான தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.