சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ” அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 1998 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தினகரன் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை வாரியம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன. அதன் பிறகும் 31 கோடி ரூபாய் அபராதத் தொகையை அவர் செலுத்தவில்லை. அபராதத் தொகையை வசூலிக்க, தற்போது வரை அமலாக்கத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தகவல் பெறும் ஆணையத்திடம் அபராதத் தொகை பெறப்பட்டதா எனக் கேட்டு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.