தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எந்திரன் பட கதை திருட்டு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய ஷங்கரின் மனு தள்ளுபடி!

டெல்லி: எந்திரன் திரைப்பட கதை திருட்டுப் புகாரில் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Endhiran
Endhiran

By

Published : Oct 12, 2020, 2:07 PM IST

Updated : Oct 12, 2020, 2:23 PM IST

1996ஆம் ஆண்டு 'இனிய உதயம்' என்ற தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய 'ஜுகிபா' கதை வெளியானது. அதே கதை மீண்டும் 'தித்திக் தீபிகா' என்ற புதினத்திலும் 200ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்' திரைப்படம் வெளியான பின்புதான் ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.

அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில் ஆரூர் தமிழ்நாடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எந்திரன் திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

அதில், "1996இல் நான் எழுதிய கதையைத் திருடி எந்திரன் என்னும் திரைப்படத்தை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இது காப்புரிமை சட்டத்தின்படி குற்றவியல் குற்றம். எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காவல் துறையினர் இறுதியில் எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை. இதனால், எழும்பூர் 13ஆவது நடுவர் நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் ஷங்கர் மீதும், கலாநிதி மாறன் மீதும் குற்றவியல் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஷங்கர், கலாநிதி மாறன் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி 2011இல் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அந்த அழைப்பாணையை அடுத்து ஷங்கரும் கலாநிதி மாறனும், "ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது. நாங்கள் கதையைத் திருடவில்லை, எனவே அந்த வழக்குச் செல்லாது என உத்தரவிட வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

இதையடுத்து, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் 2019இல் நீதிபதி புகழேந்தி தீர்ப்பு வழங்கினார்.

அதில், கலாநிதி மாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், கதை ஒரே மாதிரி இருப்பதாகக் கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு காட்டி அதன்மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது எனவும், அதனால், இயக்குநர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழக்கைத் தொடர முகாந்திரம் உள்ளது எனக்கூறி எழும்பூர் நீதிமன்றத்தில் ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டார்.

கூடுதல் அம்சமாக இயக்குநர் ஷங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்போது அங்கு கூட்டம் கூடுவது, அலுவலக இடையூறுகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்திற்குத் தேவைப்படும்போது மட்டும் அவர் முன்னிலையானால் போதும் எனவும் எல்லா வாய்தாவிற்கும் முன்னிலையாகத் தேவையில்லை எனவும் உத்தரவில் கூறப்பட்டது.

இதையடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில் கரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், வழக்கறிஞர் டாக்டர் ராம் சங்கர் ஆகியோர் முன்னிலையாகி வாதாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா, கே.எம். ஜோசப் ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வு, வழக்கில் முகாந்திரம் இல்லாததால் இயக்குநர் சங்கர் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இயக்குநர் ஷங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஒருமுறைகூட முன்னிலையாகவில்லை, இதே எழுத்தாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி இழப்பீடு கேட்டு தாக்கல்செய்துள்ள உரிமையியல் வழக்கில் உயர் நீதிமன்றம் சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் ஷங்கர் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Oct 12, 2020, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details