சென்னையில் பெய்யும் சாதாரண மழைக்கே மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. அதுவே சற்று பலமாக பருவமழைக்காலங்களில் பெய்தால் குடியிருப்புகளுக்குள் மட்டுமல்லாது இரண்டு மூன்று மாடி கட்டடங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதற்கு கடந்த 2015 ஆண்டு பெருவெள்ளமும், தற்போதைய நிவர் புயலுமே எடுத்துக்காட்டு. இதற்கு முக்கிய காரணம் சென்னையின் வடிகால்களான வாய்க்கால்கள், கால்வாய்கள், ஆறுகள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டதுதான்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற பல்வேறு தரப்பினரும், குறிப்பாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.