தங்களின் பணிகளைத் தாங்களே செய்துகொள்ள முடியாதவர்கள் என்ற பெரும்பான்மை மக்களின் பொதுபுத்தியை பல்வேறு துறைகளில் தங்களின் அசாத்திய உழைப்பாலும், அளவில்லா வெற்றிகளாலும் மாற்றுத்திறனாளிகள் உடைத்தெறிந்துள்ளனர். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், அதற்கான உழைப்பையும் செலுத்த தயாராக இன்னும் ஆயிரமாயிரம் மாற்றுத்திறனாளிகள் காத்துக்கிடக்கின்றனர்.
அத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்குத் தற்போதைய தேவை மக்களின் கழிவிரக்கமல்ல (பச்சாதாபம்). மாறாக, சுய உழைப்பின் மூலம் வாழ விரும்பும் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் சமவுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது. அவற்றை உறுதிசெய்ய இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016, இட ஒதுக்கீடு போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவர்களின் ஒட்டுமொத்தக் குரல், தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு, தனியார் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதில் நிலவும் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய 'டிசம்பர் 3' இயக்கத்தின் தலைவர் பேரா. தீபக், “2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், அரசுத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களைக் கண்டறிய வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகப் பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய முடியும்.
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், மாற்றுத்திறனாளிகளின் அவற்றை சட்ட ரீதியாக உறுதிசெய்கிறது. அரசுத்துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள 4 % இட ஒதுக்கீட்டில் அவர்களுக்காக பணியிடங்கள் கண்டறியப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. இது வரவேற்க வேண்டிய சட்டம் தான் என்றாலும், எவ்வளவு நாள்களுக்குள் அவை கண்டறியப்பட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகளின் பணிகளில் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 % பணியிடங்கள் வழங்க முடியும் எனக் கூறுகின்றனர். ஆனால், மாற்றுத் திறனாளிகளால் அந்த பணிகளை மேற்கொள்ள முடியாது என கூறி எத்தனை உள்பிரிவுகளில் விலக்கு வாங்கி இருக்கிறார்கள் என்றால் பதில் இல்லை. இவ்வாறு வாய்ப்புகளை மறுக்கின்றனர்.
அண்மையில், ஆவின் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பணிக்கான ஆட்சேர்ப்பு விளம்பரத்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படுமென்ற தகவல் இல்லை. ஒரு அரசு நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடம் வழங்கவில்லை என்றால் அதற்குரிய விலக்கை முறையாக மாநில மாற்றுத்திறனாளி ஆணையரிடம் பெற வேண்டும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்றால் அதற்கு பதில் இல்லை.
மத்திய, மாநில அரசு துறைகளில் அலுவலகளுக்கான பணியிடங்கள் கண்டறியப்படாவிட்டால், அதில் இட ஒதுக்கீடு கேட்க முடியாது. 4 % இட ஒதுக்கீட்டிற்கான பணியிடங்களை கண்டறிந்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். எனவே, முதலில் பணியிடங்கள் கண்டறியப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய, கண்காணிப்பை மாநில மாற்றுத்திறனாளி ஆணையர் வலுப்படுத்த வேண்டும். மாநில மாற்றுத்திறனாளி ஆணையம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கப்படுகிறது என பொத்தம்பொதுவாக கூறப்படுகிறது. எந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்கிறது என்பதை சற்று ஆழமாக பார்க்க வேண்டும். ஓரளவு கைகால் முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும், படித்த நன்கு ஆங்கிலம் தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. இதனால், 1% சதவீதத்திற்கும் கீழேயுள்ள உள்ள மாற்றுத்திறனாளிகள் பயனடைகின்றனர். இயலும் தன்மை இருக்கக்கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த வாய்ப்பு அளிக்கும் சமூகமாக நாம் இருக்கிறோம் என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
ஆனால், இதற்கு தனியார் துறை எந்தளவு முயற்சி எடுத்துள்ளது என்றால் நாஸ்காம், பிக்கி, சிஐஐ போன்ற அமைப்புகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்களே தவிர, அது குறித்த தெளிவான பார்வை இன்னும் அவர்களுக்கு ஏற்படவில்லை. எந்த பணிக்கு, எந்தளவு பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை அமர்த்தலாம் என்பது குறித்த தெளிவான வரையறை (Identification of Job) எதுவும் இதுவரை அவர்கள் ஏற்படுத்தவில்லை. இந்த வரையறை செய்வதற்கு இதுவரை எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை அவர்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் போது மிகவும் குறைவான ஊனம் இருப்பவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது, மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறைகள் வேலைவாய்ப்பு வழங்குவதில்லை. ஆனால் அவர்கள் பணி செய்வதற்கான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் வந்துள்ளன. இது தொடர்பாக அறிவியல் பூர்வமான அணுகுமுறையை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, ஒவ்வொரு நிறுவனமும் தனது நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும். இந்திய நிறுவனங்களானலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களானாலும் சரி கொள்கை அறிக்கையை தயார் செய்ய வேண்டும். அதனை மாநில மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் தேசிய மாற்றுத்திறனாளி ஆணையர் அலுவலகங்களுக்கு அளிக்க வேண்டும். ஆனால் எனக்கு தெரிந்து ஒரு நிறுவனமும் இதுபோன்ற வரையறையை தயாரித்து அளித்ததாக தெரியவில்லை.
தனியார் துறையில் அரசு நினைத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். ஆனால் அதனை செய்வார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. அரசு இயக்குவது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். மாற்றுத் திறனாளிகளின் பாதிப்புகளில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவற்றில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நண்பனாக இருக்கிறேன் என கூறுவது புண்ணுக்கு புழுகுப் பூசுவது போல் உள்ளது.
மாநில அரசோடு ஒப்பிடும்போது, மத்திய அரசு சற்று தெளிவாகவே எங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடுகின்றது. அதில், எந்த வகையான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என விபரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.