சென்னை:புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரான ஸ்விகி ஊழியர்களின் இரண்டாம் நாள் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஸ்விகி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவுப்பொருட்களை, வீடு தேடிக்கொண்டு அளிக்கும் நிறுவனங்களின் முன்னணியாகத் திகழும் ஸ்விகி (Swiggy) நிறுவனத்தில் சென்னை முழுவதும் 500-க்கும் மேலான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதும் கூட, இவர்களின் பணி அளப்பரியது. ஆனால், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லாதநிலையில் இந்த ஊழியர்கள் தினமும் பயணம் செய்கின்றனர்.
சமீபத்தில் ஸ்விகி நிறுவனம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள், இவர்களின் உழைப்பை, மேலும் சுரண்டும்விதமாக அமைந்துவிட்டதாக இந்த ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படுவது ரத்து செய்யப்படுவதோடு, பணிநேரம் 16 மணிநேரம் வரை அதிகரித்துள்ளது. இதனால், மாதம் ரூ.12,000 சம்பாதிப்பதே மிகவும் கடினமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.