தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இடைநீக்க காலத்திற்கான ஜீவன படியை மறுப்பது தனிநபர் உரிமை மீறல் - உயர் நீதிமன்றம் கருத்து - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் ஊழியரின் ஜீவன படியை முழுமையாக மறுப்பது, அரசியல் சாசனம் வழங்கிய தனிநபர் வாழ்க்கைப் பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 11, 2020, 1:03 PM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள ஜமீன் இளம்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிச் செயலாளராகப் பணியாற்றிய இளங்கோ என்பவர், கையாடல் குற்றச்சாட்டு காரணமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கான ஜீவன படியை வழங்கக்கோரி இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜீவன படி வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஜமீன் இளம்பள்ளி கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, கூட்டுறவு சங்க செயலாளர் ஊழியர் அந்தஸ்துக்குள் வராததால், அவருக்கு ஜீவன படி வழங்க முடியாது என கூட்டுறவு சங்க விதிகளையும் தமிழ்நாடு அரசின் ஜீவன படி தொடர்பான சட்டப்பிரிவுகளையும் சுட்டிக்காட்டி, மேல் முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

பணியிடை நீக்க காலத்தில் வாழ்க்கையை நடத்துவதற்காக வழங்கும் ஜீவன படியை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறுவதைப் போன்றது என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சட்டத்தின் கீழும் கூட்டுறவு சங்க விதிகளின் கீழும் செயலாளரை ஊழியராகக் கருத முடியாது என்றபோதும், இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவன படியை முழுமையாக மறுப்பது என்பது அரசியல் சாசனத்தின் தனிநபர் வாழ்க்கைப் பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஜீவன படி கோரி இளங்கோ அளித்த மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து, தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

ABOUT THE AUTHOR

...view details