ரிசர்வ் வங்கி அறிவிப்பு தொடர்பான விளக்கங்கள், கடன்களுக்கான மாதாந்திர தவணையை திரும்ப செலுத்துவது தொடர்பான அறிவிப்பு மக்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அதில் முதன்மையானது இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? அல்லது நான்காவது மாதத்தில் மொத்தமாக திரும்ப செலுத்த வேண்டுமா? கிரெடிட் கார்டுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா? உள்ளிட்டவை ஆகும்.
இ.எம்.ஐ. நிறுத்தம்
கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள முடக்கம் ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் பலரின் வருவாய் குறைந்துள்ளது. தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கடனாளர்கள், வீடு, வாகன, தனி நபர் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை உள்ளடக்கிய மாத தவணை (EMI) செலுத்துவதை மூன்று மாதம் ஒத்தி வைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கிரெடிட் கார்டு
அதாவது கடனை திரும்ப செலுத்த மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். இந்த உத்தரவு ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொருத்தும்.
முக்கியமாக கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இவை வங்கியில் பெறப்பட்ட கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். மூன்று மாதத்துக்கு கடன்களுக்கான மாதாந்திர தவணை செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.