தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொதுச் சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்கும் என்று அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
அரசின் முக்கியத் துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
தூய்மைப் பணியாளர்களுக்காக இயக்கப்படும் பேருந்து அதன்படி, தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக, சென்னை அதன் புறநகர்ப் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூவிருந்தவல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200 மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுபோன்ற அவசரப் பணிகளுக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளதாகப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவை மறுத்தால் துறை ரீதியான நடவடிக்கை...!'