தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மரகத லிங்கத்திற்கு இவ்வளவு மதிப்பா? - தருமபுரம் ஆதீனத்தில் விசாரணை

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரகத லிங்க சிலை தஞ்சையில் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு, சிறப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சோழப் பேரரசின் ஏழு மரகத லிங்கங்கள் குறித்தும் காணலாம்.

திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்

By

Published : Jan 1, 2022, 10:16 AM IST

Updated : Jan 2, 2022, 5:45 PM IST

சோழப் பேரரசர் தந்த மரகத லிங்கங்களின்வரலாறு

12ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், 'முசுகுந்த சோழச் சக்கரவர்த்தி' என்ற பேரரசருக்கு இந்திரன் மூலமாக ஏழு மரகத லிங்கங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மரகத லிங்கங்களைத் திருவாரூர், வேதாரண்யம், திருக்குவளை, திருக்காரவாசல், திருநள்ளாறு, நாகபட்டினம், திருவாய்மூர் ஆகிய ஏழு சிவன் கோயில்களில் பொதுமக்கள் வழிப்பாட்டிற்காக முசுகுந்த சோழச் சக்கரவர்த்தி என்ற சோழப் பேரரசர் கொடுத்ததாக வரலாறு உண்டு.

கண்ணாடியாலான மரகத லிங்கத்தை அருள் வழங்கும் கடவுளாகவும், அதற்குச் செய்யப்படும் பாலாபிஷேகம் மருத்துவ சக்தியைக் கொண்டதாக மாறுவதாகவும் பொதுமக்கள் நம்பிக்கைக் கொண்டு வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நவரத்தினங்களில் உயர்ந்த ஒன்றான வைரத்திற்கு அடுத்தபடியாக அதிக விலை கொண்ட ரத்தினமாக இந்த மரகத கற்கள் உள்ளன.

திருவாரூர் தியாகராஜர் கோயில் மரகத லிங்கம்

பல நூறு ஆண்டுகளுக்கும் பழைமையான, திருவாரூர் தியாகராஜர் கோயிலிலுள்ள 250 கிராம் எடையுள்ள மரகதலிங்கம் 1992ஆம் ஆண்டு திருடப்பட்டது. அதை, டிஜிபி திலகவதி தலைமையிலான தமிழ்நாடு பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 2009ஆம் ஆண்டு மீட்கப்பட்டது.

அப்போது அதன் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்று டிஜிபி திலகவதி தலைமையிலான குழு தெரிவித்திருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது. அருள்மிக்க மரகத லிங்கத்தை வெளி நாட்டுத் தொழிலதிபர்கள் வீட்டில் வைத்து வழிபட பல கோடி ரூபாய் கொடுத்து வாங்க எண்ணினர்.

மிகக் குறைந்த அளவிலேயே மரகத லிங்கங்கள் இருப்பதாலும், கள்ளச் சந்தையில் பல கோடி மதிப்பிற்கு விற்கப்படுவதாலும் திருடர்கள் மரகத லிங்கத்தைக் குறிவைப்பதாகத் தெரிகிறது. 1000 ஆண்டுகள் பழமையான மரகத சிவலிங்கத்தைச் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்த நகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் சாமியப்பன் என்பவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட மரகத லிங்கம்

சோதனையில், சாமியப்பன் என்பவரின் மகன் அருண் பாஸ்கரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், தனது தந்தையின் வங்கி லாக்கரில் தொன்மையான மரகத சிவலிங்க சிலை ஒன்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சிலை எப்போது யாரால் அவருக்குக் கிடைத்தது என்பது தொடர்பான ஆவணங்களைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கேட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாததால் மரகத சிவலிங்க சிலையை அலுவலர்கள் மீட்டனர்.

மரகத லிங்கத்தின் மதிப்பு ரூ.500 கோடி

அவரிடமிருந்து மீட்கப்பட்ட மரகத சிவலிங்கம் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது? சிவலிங்கம் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருந்ததா? உள்ளிட்டவை குறித்துச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து செய்தியாளருக்குப் பேட்டியளித்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, மீட்கப்பட்ட மரகத சிவலிங்கம் தொன்மையானது எனவும், ரூ.500 கோடிக்கும் மேல் இதன் மதிப்பு இருக்கும் எனவும் வல்லுநர்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இது எந்த கோயிலுக்குச் சொந்தமானது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.


தருமபுரம் ஆதீனத்தில் விசாரணை

மேலும், ஏற்கனவே 2016ஆம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து மரகத லிங்கம் ஒன்று காணாமல்போனதாகத் திருக்குவளை காவல் நிலையத்தில் ஆதீன கண்காணிப்பாளர் சவுரி ராஜன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மரகத சிலை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமானதா? என்பது குறித்து ஆதீன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.

மேலும், மரகத லிங்கம் ஆதீனத்திற்குச் சொந்தமானது எனத் தெரியவந்தால் சிலை காணாமல்போனது குறித்து ஆதீன நிர்வாகிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Zonal level monitoring committee: கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்க கண்காணிப்பு குழு

Last Updated : Jan 2, 2022, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details