சென்னை: 6 நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழை காரணமாக சென்னையில் பல சாலைகள் மற்றும் ஓடைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது. மேலும், வீட்டினுள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.
கடந்த 6 நாட்களில் மின்சாரம் பாய்ந்து இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் மாதவரம் வேர்ஹவுஸில் இருந்து வெளியே வரும் போது தேங்கிக் கிடந்த மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதே போல் நேற்று முன்தினம் (நவ.11) திருவொற்றியூரை சேர்ந்த மாதவன் மயிலாப்பூரில் பேருந்து ஏற சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மேலும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு லாரி ஓட்டி சென்ற போது தரமணி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும் திருவொற்றியூரை சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான கமலி நேற்று முன்தினம் (நவ.11) கடைக்குச் சென்ற போது தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.