சென்னை : தாம்பரத்திலிருந்து வேளச்சேரி, முடிச்சூர், பெருங்களத்தூர், கிண்டி செல்வதற்காக நான்கு வழி தடங்கள் உள்ளன. இந்த நான்கு வழித்தட மேம்பாலம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் வாகனங்கள் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் மேம்பாலத்தில் திடீரென ஒரு மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்துள்ளது.
கம்பம் விழும் நேரத்தில் வாகன ஓட்டிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தினர்.
மேலும், தாம்பரம் மேம்பாலத்தின் மீது உள்ள அனைத்து கம்பங்களும் பராமரிப்பு இல்லாமல் பல மாதங்களாக துருப்பிடித்து விழும் நிலையில் உள்ளதாகவும், இதனால் உயிர் சேதம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மேம்பாலத்தில் உள்ள மின் கம்பங்களை மாநகராட்சி சீர் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு மோடி பாராட்டு