வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தது. பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூசன் குமார், கூடுதல் இயக்குநர் சேபாலி.பீ.சரன், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சா, செயலாளர் மல்லே மாலிக் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு உள்ளிட்ட அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில், அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், நவாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன், பாஜக சார்பில் ஓம் பதல், கே.டி.ராகவன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும், 80 வயதுக்கு மேற்பட்டோரை அஞ்சல் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது, பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் கட்சியினர் மீது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள், திமுக தரப்பில் வைக்கப்பட்டதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.