சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்தல் நடத்தை விதிகளின்படி எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதிகள், சமூகத்தினர், மதத்தினர் அல்லது பல்வேறு மொழி பேசும் இனத்தினரிடையே நிலவும் வேறுபாடுகளை அதிகப்படுத்தும் வகையிலோ அல்லது வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலோ செயல்படக் கூடாது.
வாக்குகளை பெறுவதற்காக சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வேண்டுகோளையும் விடுக்கக் கூடாது. கோயில், மசூதி மற்றும் தேவாலயங்கள் உள்பட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.
தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்
பிற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், அவர்களின் கடந்த கால பணி மற்றும் செயல்பாடு குறித்து இருக்க வேண்டும். கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது கட்சி தொண்டர்களின் பொது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மைகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் தனி நபரது கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக அவர்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது மறியல் நடத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
வாக்காளர்களுக்கு எவ்வகையிலும் லஞ்சமோ அல்லது வெகுமதியோ கொடுக்கக் கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர் அல்லது அவரது ஆதரவாளர்களை அச்சுறுத்தல் அல்லது தேவையற்ற செல்வாக்கை அவரிடம் பயன்படுத்துதல், அவருடைய வாக்குரிமையில் தலையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
மதுபானங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வழங்கப்படும் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் கூடாது.
பிரச்சாரங்களில் கட்டுப்பாடுகள்
விளம்பரங்கள் பொறுத்த வரை, அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக்கூடாது.
பொதுக் கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரச்சாரங்கள் மற்றும் ஒலிபெருக்கி பொறுத்த வரை, ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். எந்தக் கட்சியோ அல்லது வேட்பாளரோ தகுதியுள்ள அலுவலரிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.