சென்னை வாலாஜா சாலையில் இன்று காலை (ஜன.30) 5 மணியளவில் ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்டாப்-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணம், பரிசுப் பொருள்கள், போதைப் பொருள்கள், எடுத்துச் செல்கிறார்களா எனப் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வாலாஜா சாலையில் வாகன சோதனையில் தேர்தல் படையினர் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுரையிலிருந்து சென்னை ரிச்சி தெருவிற்கு கொண்டு செல்வதற்காக 20 ஐபோன், 20 கூகுல் பிக்ஸல் செல்போன்கள்,15 லேப்டாப்கள் வைத்து இருந்துள்ளனர்.
முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துவந்ததால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.11.50 லட்சம் ஆகும். இதனை திருவல்லிகேணியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை