தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் காலங்களில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் கட்சிக்கொடி, பதாகைகள், துண்டுகள் உள்ளிட்டவை தயாரிப்பில் தெலங்கானா மாநிலம், சிரிசில்லா நெசவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்த செய்தித் தொகுப்பைக் காணலாம்:
தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், சிரிசில்லா நகரில் நெசவு மற்றும் பீடி சுற்றும் தொழிலை நம்பி எண்ணற்ற குடும்பங்கள் உள்ளன. ஆண்கள் ஜவுளித் தொழிலில் பணியாற்றும் அதே வேளையில், பெண்கள் பீடி சுற்றும் பணியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பல்வேறு கட்சிகளிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான ஆர்டர்கள் கிடைப்பதால், இங்குள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதோடு, வழக்கமாகக் கிடைக்கும் வருமானத்தைவிட கூடுதல் ஊதியத்தையும் பெற்று உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
தேர்தல் பரப்புரை பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்த வேண்டிய பாலியஸ்டர் துணிப்பொருள் தயாரிப்பில் சுமார் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 27 ஆயிரம் தறிகள் செயல்பட்டு வருகின்றன. கட்சிக்கொடிகள், துண்டுகளுக்கான ஆர்டரும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.