தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு - வாக்குபதிவு எந்திரம் பாதுகாப்பு விவகாரம்

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Mar 30, 2021, 12:35 PM IST

Updated : Mar 30, 2021, 2:22 PM IST

12:23 March 30

சென்னை: 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட மாட்டாது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும், தேர்தலுக்கு முன்பாகவே மின்னனு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், 15 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். பதற்றமான தொகுதிகளை கண்டறிவது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த வேண்டும்.

வாக்குபெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிட்டிருந்தன.

இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, பதற்றமான வாக்குச்சாவடி மட்டும் அல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளையும் நேரலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவதற்கான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். வாக்குப்பதிவு இயந்திர பதிவுகளை மாற்ற முடியும் என வாக்காளர் மத்தியில் அச்சம் உள்ளதாகவும், 2019 மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமலேயே பாதுகாப்பு அறையில் தாசில்தார் ஒருவர் சென்றதால் நடவடிக்கைக்கு உள்ளானதையும் சுட்டிக்காட்டி, ஜாமர் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்றும், ஆனால் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தனர். அதன் பட்டியல் தற்போது தயாராகி வருவதாகவும், மதுரை தொகுதி பாதுகாப்பு அறைக்குள் தாசில்தார் சென்றாரே தவிர எதிலும் மாற்றம் செய்யவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய வேண்டுமெனவும், வாக்குப்பதிவுக்கு முன்பாகவும் மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பது, அடையாளம் காணப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியல், விவிபேட் இயந்திரங்களை அதிகரிப்பது, தேர்தலுக்கு பிறகு பாதுகாப்பு அறைகளில் ஜாமர் பொருத்துவது ஆகிய மனுதாரரின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 300 மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பதற்றமான தொகுதிகளை கண்டறிய மார்ச் 26ஆம் தேதி, 12 அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதேபோல், 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட மாட்டாது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். 

தேர்தலுக்கு முன்பாகவே மின்னனு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மின்னணு வாக்கு இயந்திரங்களை வை-ப்பை மூலமாக தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம் செய்ய முடியாது என்பதால், மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவி பொருத்த அவசியமில்லை.

இந்த மையங்களில் மீன் கசிவு மூலமாக ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும். பாதுகாப்பு மையங்களில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்படும். 

11 ஆயிரத்தும் மேற்பட்ட பதற்றமான வாக்குசாவடிகள் முழுமையாக இணையதளம் முலமாக நேரலை செய்யப்படும். ஆனால், பாதுகாப்பு கருதி வேட்பாளர்கள் அல்லாமல் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே இந்த நேரலையை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் நாளில் கரோனா தாக்கம் அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.

அதேபோல் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்து திமுகவின் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

இதையும் படிங்க: வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

Last Updated : Mar 30, 2021, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details