சென்னை:(Omicron In TamilNadu): மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகளின் தகவல் குறித்த மின்னணுப் பலகையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'மருத்துவமனையின் சேவைகள், சிகிச்சை முறைகள், கட்டமைப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணுப் பலகையில் தகவல்கள் ஒளிபரப்பு ஆகிக் கொண்டே இருக்கும். இன்னொரு மின்னணுப் பலகை மூலம் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறித்து விவரமும் வெளியிடப்படும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் மின்னணுப் பலகை
தமிழ்நாட்டில் உள்ள 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்குள் இந்த மின்னணு தகவல் பலகை நிறுவப்படும். புதியதாகப் பயன்பாட்டிற்கு வர உள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இச்சேவை நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. தினமும் சராசரியாக 600 என்ற எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டாலும் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுக்குத் தொடர்புடையவர்கள் ஆகியோரைப் பரிசோதனை செய்ததில் 104 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 82 பேருக்கு மரபணு எஸ்-ஜீன் (S-Gene) டிராப் எனப்படும் ஒமைக்ரான் வகை கரோனா இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.
ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்
இவர்களது மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளைக்குள் இதன் முடிவுகள் வெளியாகும்.