சென்னை: மின் விளக்குகள் பராமரிப்பை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 10 மாதங்களில் ரூ.89.56 லட்சம் வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மின்துறையின் மூலமாக 2,91,415 தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நிர்பயா திட்டத்தின்கீழ் ரூ.33.57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 5,594 புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் 85 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும், ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் மிகவும் துருப்பிடித்த, உயரம் குறைவான 1997 தெரு விளக்கு மின்கம்பங்கள் மாநகராட்சி சார்பில் புதிய மின்கம்பங்களாக மாற்றியமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 10 மண்டலங்களில் தெருவிளக்கு மின்கம்பங்களை இயக்கி பராமரிக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, புகார் பெறப்பட்ட குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மின்விளக்குகளை ஒளிர செய்யாமல் இருந்தாலோ (அ) பராமரிப்பு பணிகளுக்கான பணியாளர்கள் மற்றும் வாகனங்களை சரியான எண்ணிக்கையில் வழங்காமல் இருந்தாலோ ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.