ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக் கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மீனவர் அமைப்பை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை 22 மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் கால வரைமுறையற்று விதித்த தடையை நீட்டித்துள்ளதாகவும், மறு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதால், இந்த வழக்குகளை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார்.