தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது திட்டமிடப்பட்ட குற்றம்...!

மனித கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்துவதை தடைசெய்து, அவர்களின் மறுவாழ்வுக்கு சட்ட உத்தரவாதங்களை வழங்குவதற்காக சட்டம் இயற்றப்பட்டது. மனித கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தியதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் இந்த சட்டம் முன்மொழிகிறது.

தூய்மைப் பணி
தூய்மைப் பணி

By

Published : Dec 25, 2020, 4:53 AM IST

மனிதர்கள் சுய மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமையை ஒரு சிலர் மட்டும் ஏன் அனுபவிக்கிறார்கள்? சக மனிதர்களின் அழுக்கு மற்றும் அசுத்தத்தை சுத்தம் செய்யும் துயரத்தில் இந்த நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள்? நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்ற கேள்விகளுக்கு பதில்களைத் தேடும்போது, ​​சட்டங்களையும் அரசாங்கத்தையும் குறை கூறுவது சுலபம். எந்தவொரு பகுப்பாய்வும் மேலோட்டமாக வெளிப்புற நிலைமைகளை மட்டும் கூறி, பிரச்னையின் மூலத்தை உயிரோடு வைத்திருக்கிறது.

ஒரு சில பிரிவுகளுக்கு எதிராக சமூகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான பாகுபாடு அவர்களை கல்வி மற்றும் பொருளாதார சமத்துவத்தை மறுத்து அடிமட்டத்தில் வைத்திருக்கிறது. இதற்கு ஒரு வெளிப்படையான மற்றும் வெட்கக்கேடான உதாரணம் துப்புரவு தொழிலாளர்கள். மனித கழிவுகளை அகற்ற சக மனிதர்களைப் பயன்படுத்துவதற்கான இந்த நடைமுறை இந்த நாட்டில் இன்னும் உயிருடன் உள்ளது. இது, பல ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் இதுபோன்ற ஒழுக்கக்கேடான நடைமுறைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்த இயலாமல், கண்மூடித்தனமாக இருக்கும் அரசாங்கங்களின் பயனற்ற தன்மை மீது படிந்துள்ள கறை.

மனித உரிமை மீறல்

அரசியலமைப்பு தனிநபர்களின் சுயமரியாதைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பொது சுகாதாரத்தை உறுதி செய்வது மாநிலத்தின் முதன்மை கடமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, 1993ஆம் ஆண்டில் 'கையேடு துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தல் மற்றும் உலர் கழிவறைகளை நிர்மாணித்தல் (தடை) சட்டத்துக்கு எதிராக அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றியது.' மாநிலங்கள் முற்றிலும் பிடிவாதமாக இருந்ததால் எந்த கட்டத்திலும் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013, மனித கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்துவதை தடைசெய்து, அவர்களின் மறுவாழ்வுக்கு சட்ட உத்தரவாதங்களை வழங்குவதற்கான மற்றொரு சட்டம் இயற்றப்பட்டது. மனித கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தியதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் இந்த சட்டம் முன்மொழிகிறது.

ஆனால், விசித்திரமான விஷயம் என்னவென்றால், நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் அந்த 'தொழிலை' தொடர்ந்து செய்துவரும் நிலையில் 2013இன் சட்டத்தின் கீழ் இந்த ஏழு ஆண்டுகளில் யாரும் தண்டிக்கப்படவுமில்லை அபராதமும் விதிக்கப்படவில்லை. நாடு முழுவதும் இன்னும் 7.7 லட்சம் துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மனித மலத்தை தங்கள் கைகளால் தூக்கி கூடைகளில் சுமந்து செல்லும் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னமும் இந்திய ரயில்வேயில் துப்புரவு தொழிலாளர்ககளாக வேலை செய்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ புள்ளி விவரங்களை தவிர்த்து, நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,700 பேர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதால், வெளிப்படும் நச்சு வாயுக்களால் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த காலத்தில் இயற்றப்பட்ட இரண்டு சட்டங்களும் விரும்பிய முடிவுகளைத் தரவில்லை என்பதால், அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டங்களில் துப்புரவு தொழிலாளர்களை நியமிப்பதைத் தடைசெய்து சட்டம் திருத்தப்பட்டது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தண்டனைகளின் தீவிரம் அதிகரிக்கிறது. இந்த தொழிலை தலித் சமூகத்தின் மீது திணித்து அவர்களை பல தலைமுறைகளாக 'தீண்ட தகாதவர்களாக' ஆக்குவதற்கான மேலாதிக்க அணுகுமுறை நிறுத்தப்படும் வரை, அத்தகைய சட்டங்கள் கண் துடைப்பாகவே இருக்கும். செப்டிக் தொட்டிகளில் இறங்கி அவற்றை சுத்தம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆஸ்துமா, ஹெபடைடிஸ் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு துப்புரவுத் தொழிலாளர்களின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகளுக்கு மிகாமல், பரிதாபகரமான வாழ்க்கை வாழ்கின்ற வரை, இந்திய ஜனநாயகம் நல்லாட்சியை நோக்கி முன்னேற முடியாது.

பொதுமக்கள் விழிப்புணர்வு மூலம் தீர்வு

வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்படும் ஒரு சமூகத்தில் இன்னும் உலர் கழிவறைகள் இருந்தால், அந்த முன்னேற்றத்திற்கு மனித அக்கறை இல்லை என்று அர்த்தம். நாடு முழுவதும் இன்னும் லட்சக்கணக்கான ‘உலர் கழிவறைகள்’ இருகும்போது, அவற்றை சுத்தம் செய்ய அதிக ஆட்கள் தேவை என்று அர்த்தம். அதனால்தான் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (எஸ்.கே.ஏ) உலர்ந்த கழிவறைகளை இடிக்கும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. ஒரு சிவில் சமூகம் இன்னும் இந்த கழிவறைகளைப் பயன்படுத்தி சிலரை தலைமுறைகளாக துப்புரவு தொழிலாளர்ககளாக பயன்படுத்துகிறது என்பது மனிதாபிமானமற்ற செயல்.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற அணுகுமுறை சிலரை அளவில்லா அடக்குமுறை மற்றும் தீண்டாமைக்கு உட்படுத்தி, அதே நேரத்தில் சிலரை 'மரியாதைக்குரியவர்' என்று உயர்த்துகிறது. சட்டங்களை இயற்றுவதை விட இத்தகைய குறுகிய மனப்பான்மையை நிறுத்துவதும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிக முக்கியமானது. உள்ளூர் அமைப்புகளைத் தயார்படுத்துவதும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். கூடுதலாக, கழிவுநீர் அமைப்புகளின் நவீனமயமாக்கல், மனிதகழிவுகளை சுத்திகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

தூய்மைக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவைப் பற்றியும் வலுவான செயல் திட்டத்தை பற்றியும் சமூகம் அறிந்திருக்கவில்லை என்றால், சுகாதார மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் சேவைகள் விலைமதிப்பற்றவை என்றும் அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றும் காட்டப்படும் போலி அனுதாபம் அர்த்தமற்றதாக இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details