தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் - கல்வியாளர்கள் - அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து சிறப்புத் தகுதி வழங்குவதால் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ள வேண்டுமென கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

university
university

By

Published : Dec 17, 2019, 8:07 PM IST

புகழ்பெற்ற கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தை அதே பெயரில் ஒன்றும், ‘சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம்‘ என்றும் இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐந்து அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், ”அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பின் தரம் குறைந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தோடு நான்கு கல்லூரிகள் மட்டும் செயல்பட்டபோது அதன் கல்வித்தரம் நன்றாக இருந்தது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் 500 பொறியியல் கல்லூரிகளை இணைத்துள்ளனர். போதுமான கட்டமைப்பு வசதிகள் அங்கே இல்லாததால் அந்தக் கல்லூரிகளின் தரத்தினை மேம்படுத்துவதிலேயே நேரம் செல்கிறது.

சிறந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து கல்வி அளிக்கும்போதுதான் தரம் மேம்படும். மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு வெளிநாடுகளிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களிலிருந்து சிறந்த பேராசிரியர்களை அழைத்து கல்வி கற்பிக்க வேண்டும்.

மேலும், இவ்விவகாரத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது தமிழ்நாடு மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். இப்பிரச்னையில் மத்திய அரசிடம் தெளிவைப் பெற்று தமிழ்நாடு அரசு யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

இடஒதுக்கீடு முறையால்தான் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு சமூக ரீதியாக ஒரு உச்சத்தை அடைய முடிந்திருக்கிறது. அதன் பயனால்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடும் இந்திய அளவில் வழிவகுக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை சமரசமின்றி செயல்படுத்தினால் மட்டுமே ஒருங்கிணைந்த சமுதாய வளர்ச்சி இருக்கும். எனவே, இட ஒதுக்கீட்டை எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசு விட்டுக் கொடுக்கக்கூடாது“ என வலியுறுத்தியுள்ளார்.

நெடுஞ்செழியன், கல்வியாளர்

இதையும் படிங்க: ‘மருத்துவ இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லை’ - அமைச்சர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details