தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. நாளை பள்ளிக் கல்வி, உயர்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில், கல்வித்துறை மானியக் கோரிக்கையில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பவை குறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,
- பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வியில் மாணவர்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பு இல்லை. 5 வயது முதல் 10 வயது வரை உள்ள மாணவர்கள் படிப்புடன் இணைந்து விளையாட்டு உள்ளிட்ட திறன்களை பெறுவதற்கான ஆசிரியர்களை நியமிக்க, எந்த முயற்சியையும் அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே ஆசிரியர்களுடன், ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும்.
- பள்ளிக் கல்வித் துறையில் கூடுதலாக ஐஏஎஸ் அலுவலர்களை நியமனம் செய்கிறார்களே தவிர, வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற இலக்கினை அடையவில்லை. அதை அடைய வேண்டும்.
- அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி தொடங்குவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், எந்த நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி இருக்கிறதோ அங்கு தொடங்கப்படும் என்கின்றனர். அங்கன்வாடியின் பணிகள் வேறு. எனவே, எல்கேஜி, யுகேஜி என்பது பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலும், அங்கன்வாடி பணிகள் சமூகநலத் துறையின் கீழும் இருக்க வேண்டும். இரண்டையும் இணைப்பது தவறானது.
- மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாற்றிவிட்டு மாண்டிசோரி பாடம் படித்தவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்.
- பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வியை அளித்து ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களை மிகவும் வலுவாக கற்றுத்தர வேண்டும். ஆரம்பத்திலேயே பாடங்களை ஆங்கிலத்தில் கற்றுத் தருவது என்பது அந்தக் குழந்தை எந்த மொழியிலும் புலமை பெறாமல் போக வாய்ப்புள்ளது.
- நகர்புறம், கிராமப்புறம் என ஒவ்வொரு பகுதியிலும் அரசுப்பள்ளி இருக்கிறது. இதுபோன்ற கட்டமைப்பை வைத்துக்கொண்டு அரசு இதுவரை அருகாமைப் பள்ளிகளை அறிவிக்கவில்லை. எனவே, இப்பொழுதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும், உள்ளாட்சிப் பள்ளிகளை ஒரு எல்லை வரையறை செய்து, அருகாமைப் பள்ளிகளாக அரசு அறிவிக்க வேண்டும்.
- உயர் கல்வித் துறையில் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி முழுமையான உயர்கல்வி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.