சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. அதன்படி, 12 ஆம் வகுப்பில் 93.76% பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் உயர்கல்விக்காக மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல துறைகளை படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பதால் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாக இருக்கும்? பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் எவ்வாறு கிடைக்கும் என்பன உள்ளிட்டவற்றை கல்வி ஆலோசகர் அஸ்வின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை காட்டிலும் 1 முதல் 33 மதிப்பெண் வரை குறையும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் 10, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 %-க்கு குறைவான மதிப்பெண்களை பெற்றவர்கள் பொறியியல் படிப்பில் சேர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது 93.76 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.
பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் (ஜூன்20) முதல் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் பெறப்பட்டு வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் பெறப்படுகிறது.