கேரள மாநிலம் கரிப்பூர் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளானது. அதில் 19 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விபத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "கோழிக்கோடு விமான விபத்து செய்தி அறிந்து மிகுந்த சோகத்தில் இருக்கிறேன். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரிவைத் தாங்கும் பலத்தையும், காயமடைந்தவர்கள் விரைவாக வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில், " கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு வாழ்த்துகள். விரைவாக மீட்புப் பணியில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் " எனப் பதிவிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும்போது தடுமாறி எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகிய செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். இக்கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்
அதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன், "துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கி விமானி உள்பட 19 பேர் பலியான சம்பவம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது. பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது" என இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கேரளா ஏர் இந்தியா விமான விபத்து - மீட்புப் பணிகள் நிறைவு