சென்னை:தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த மின்சார விபத்தில் அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாட்டில் திமுக அரசு செயலிழந்து விட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மூலம் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பிறகு அதிமுக வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”தஞ்சாவூரில் உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தஞ்சாவூர் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. திருவிழா நேரத்தில் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் காவல்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் 11 உயிரிழப்புக்கு காரணம்.