சென்னை:தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, புதிய ஆளுநராக ஆர்.என். ரவி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழ்நாட்டின் 15ஆவது ஆளுநராக ஆர்.என். ரவி செப்.18ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து, அவர் செப்டம்பர் 21ஆம் தேதி டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்து, சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார்.
ஸ்டாலினுக்கு பின் எடப்பாடி
பின்னர், செப். 21டெல்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
ஆளுநருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதையடுத்து, கடந்த அக். 13ஆம் தேதி நீட் விலக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநருடன் சந்தித்திருந்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (அக். 20) சந்திக்கிறார்.
முதல் முறையாக சந்திப்பு
இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் விவரங்கள் அடங்கிய புகார் மனுவை எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் வழங்க இருக்கிறார்.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வீட்டில் சோதனை நடந்தபோது, எடப்பாடி பழனிசாமி முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.
அப்போது, திமுக அரசு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஆளுநர் ரவியை முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.
சில நாள்கள் முன்பு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநரைச் சந்தித்தது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமியிடம் கனிமொழி பேசியதும் நடந்ததும் என்ன?