தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!' - பொங்கல் பரிசில் பல்லி விவகாரத்தில் ஒருவர் தற்கொலை

பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக அரசைக் குற்றஞ்சாட்டியவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததையடுத்து அவரது மகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், 'கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல; ஜனநாயகப் படுகொலை' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசில் பல்லி
பொங்கல் பரிசில் பல்லி

By

Published : Jan 12, 2022, 6:21 PM IST

Updated : Jan 12, 2022, 7:32 PM IST

சென்னை:திருத்தணி தோட்டக்காரன் மாடம் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது தந்தை நந்தன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் சிறப்புத் தொகுப்பைப் பெற்றுள்ளார்.

அவர் பெற்ற பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நியாயவிலைக் கடை ஊழியரிடம் முறையிட்டும், செய்தியாளரிடமும் தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.

பொங்கல் பரிசு பல்லியும், தற்கொலையும்

இதையடுத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நந்தன் செயல்பட்டதாகக் கூறி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நந்தன், அவரது குடும்பத்தினருக்கு காவல் துறையினர் நெருக்கடி கொடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலிலிருந்து வந்த நந்தனின் மகன் குப்புசாமி நேற்று (ஜனவரி 11) திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் குப்புசாமியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், இன்று (ஜனவரி 12) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்கள் அரசைக் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

கேள்வி கேட்டால் மரணம்!

இந்த நிலையில், தரமான பொருளை வழங்க வேண்டிய அரசு, தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு தனது கடும் கண்டத்தைப் பதிவுசெய்துள்ள எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில்,

"பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகக் கூறிய தன் தந்தை நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற குப்புசாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும்தெரிவித்து கொள்கிறேன்.

வலைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையைக் கூறினால் பிணையில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது! இது தற்கொலை அல்ல; ஜனநாயக படுகொலை!" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பில் பல்லி.. புகார் தெரிவித்தவர் மீது வழக்கு.. மனவருத்தத்தில் மகன் தற்கொலை

Last Updated : Jan 12, 2022, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details