சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மீதான விவாதத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, " ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைத்தது மாணவர்களின் தரத்தைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. நாங்கள் படிக்கும் நேரத்தில் இரண்டு வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தால் அந்த வகுப்பை மீண்டும் படிக்க வைத்தனர். தற்போது எட்டாம் வகுப்புவரை கட்டாயமாக மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதனால் அவர்களின் திறன் என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது.
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு வைக்கப்படும் என்று முன்பு அரசு அறிவித்தது உண்மைதான். ஆனால், திமுக பொய் பரப்புரைகளை செய்ததால், அதற்கு பலி ஆகிவிட வேண்டாம் என்றுதான் அந்தத் தேர்வை நீக்கினோம். தற்போது மாணவர்கள் கல்வியில், தொடர்ந்து பல சாதனைகளை புரிந்துவருகின்றனர். அவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த ஒரு பயமும் வராமல் வெற்றி பெறுவதற்கு இந்தத் தேர்வுகள் உதவியாக இருந்திருக்கும்.