சென்னை: குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயர் வைப்பதுபோல, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்த சின்னங்களின் ஒதுக்கீடே இதற்குக் காரணம்.
மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்திற்கு ரஜினிகாந்த் என்ற பெயரில் மக்கள் சேவை கட்சி சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டு அதற்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தை புதுச்சேரியில் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தமிழ்நாட்டில் பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி வெளியானதும் ரஜினிகாந்த் தரப்பினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்று வெடிவெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மாநிலம் முழுவதும் கொண்டாடிவந்தனர். அப்படியிருக்க, உறுதியான அதிகாரப்பூர்வ தகவல்வரை கத்திருக்கவும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, இந்தத் தகவலை மக்கள் மன்றம் சின்னம் தொடர்பான செய்தியை மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். மக்கள் நீதி மய்யத்தினரோ சோக மய்யமாக காட்சியளித்தனர்.
தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட மதிப்பீடு மேற்கொண்டது பலருக்கும் ஆச்சரித்தை அளித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் நான்கு விழுக்காடு வாக்குகள் பெற்ற கமல்ஹாசன், இன்னும் சில மாதங்களில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான ஏற்றத்தைக் காண களத்தில் குதித்துள்ளார். இப்படியிருக்க, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அதிகாரியுமான ஆர். ரெங்கராஜன் கூறுகையில், டார்ச் லைட் சின்னம் கேட்டு கடந்த நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கைவைத்தோம். 2015ஆம் ஆண்டுவரை இருந்த சட்டத்தின்படி அங்கீகாரம் பெறாத கட்சிகள் ஒரு சின்னத்தில் ஒரு தேர்தலில்தான் போட்டியிட முடியும். தற்போது அது இரண்டு தேர்தலுக்குப் போட்டியிடாலம் என மாறியுள்ளதால் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம் என்றார்.