அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில், எதிர்வரும் ’நிவர்’ புயலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு நடைபெற்றது.
அப்போது, புயலின் போது மின்தடை பற்றிய புகார்கள், நுகர்வோரின் குறைகள் ஆகியவற்றை நீக்கும் பொருட்டும், மின் விபத்து ஏற்படாத வகையிலும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தேவையான மின் கோபுரங்கள், கம்பங்கள், கம்பிகள், மாற்றிகள் மற்றும் இதர தளவாடப் பொருட்களின் கையிருப்பு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
தேவைப்படும் இடங்களுக்கு செயல் பணியாளர்களை கோட்ட வாரியாக சிறப்பு குழுக்களாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கவும் தங்கமணி அறிவுறுத்தினார். இவைதவிர, கிரேன், மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க அவர் கேட்டுக்கொண்டார். துணை மின்நிலையங்களில் வெள்ள நீர் உள்புகா வகையில், தேவையான மணல் மூட்டைகள் மற்றும் நீர் இரைப்பான்களை தயாராக வைக்கவும் அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார்.
நிவரை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்! - அமைச்சர் தங்கமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும். இதனை மின்வெட்டு என நினைக்க வேண்டாம். 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. காரைக்கால் முதல் மாமல்லபுரம் வரை நான்கு மாவட்டங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது. 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க ’1912’ என்ற தொலைபேசி எண்ணை நுகர்வோர் பயன்படுத்தலாம் “ என்றார்.
இதையும் படிங்க:'மருத்துவப் படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்'