சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னையில், இரண்டு நாட்களாக இரவும் பகலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புறநகர் பகுதியில் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழை இதேபோல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், வெள்ளம் அதிகமாகி, அதன் கரையோரமுள்ள வரதராஜபுரம், லக்ஷ்மி நகர், முடிச்சூர், பி.டி.சி கோட்ரஸ், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.
இதனால், அடையாற்றில் தண்ணீர் சீராக செல்வதற்காக, தாம்பரம் தீயணைப்பு துறை, வருவாய் துறையினர் இணைந்து ஆற்றிலுள்ள செடி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடையாற்றில் ஓடும் வெள்ளம் காரணமாக, கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துவிடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல், இப்போதும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு அலுவலர்ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வேலூரில் ஏரிகளை தூர்வார வேண்டும்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்