தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்றாலே பெரிய கட்டடங்கள், உயர் சொகுசு வசதிகள் என்ற எண்ணம் பலருக்கு வரும். அதுவே உண்மையும் கூட. 24 மணி நேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவை, தற்போது ஊரடங்கால் மூடப்பட்டு பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இது பெரிதாக பேசப்பட்டாலும், வீட்டிலிருந்து பணிபுரியும் முறையே நிர்வாகச் செலவுக்கு மிச்சத்தை ஏற்படுத்துவதாக கருத்து நிலவுகிறது. எனவே, இது இனி வரும் காலங்களில் ஐடி நிறுவனங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
பெரிய ஐடி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலையில் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலைக்கு வரவும், பின்பு வீடு திரும்பவும் குளிர் சாதனப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம் முழுமைக்கும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும்.
ஊழியர்கள் உணவு, சிற்றுண்டி உண்ண உயர் ரக கேண்டீன் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நிறுவனங்களில் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியச் செலவுகள் அதிகம் ஏற்படுவது இயல்பு. இந்நிலையில், வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்யும் போது, மேற்சொன்ன செலவுகள் அனைத்தும் குறைகிறது என்பதை ஐடி நிறுவனங்கள் தற்போதைய நிலையில் உணர்ந்துள்ளன.