தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தன் மீதான வழக்கில் நேரில் முன்னிலையாக 3 மாதம் அவகாசம் கோரும் முன்னாள் நீதிபதி கர்ணன் - Ex Judge Karnanan

சென்னை: தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பணி காரணமாக தன் மீதான வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து மூன்று மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் நீதிபதி கர்ணன் காவல் துறை விசாரணை அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Breaking News

By

Published : Nov 26, 2020, 10:48 PM IST

சமூக வலைதளங்களில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளை அவதூறாகச் சித்திரித்து தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டுவரும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது, காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு நேரில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பணி காரணமாக விசாரணைக்கு முன்னிலையாக தனக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என சைபர் கிரைம் விசாரணை அலுவலர் உமா தேவிக்கு, கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "நீதிபதிகள் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன. நீதிபதி மணிக்குமாரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 50 கோடி ரூபாயும், நீதிபதி சரவணக்குமாரை பஞ்சாப் & ஹரியானா நீதிமன்றத்துக்கு மாற்ற 10 கோடி ரூபாயும் கையூட்டாக உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பெற்றுள்ளார்.

இதுவரை நான் வெளியிட்ட காணொலிகளுக்கு மாதர் சங்கங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும், புகாரும் வழங்கப்படவில்லை. பெண்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல.

ஊழலற்ற நீதித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே காணொலி வெளியிடப்பட்டது. எனது காணொலியில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, உண்மை நிலையைக் கண்டறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் உள்ளிட்ட 12 நீதிபதிகளை நேரில் முன்னிலைப்படுத்தி விசாரணை அலுவலர் விசாரணை செய்ய வேண்டும்.

மேலும், விரைவில் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில், ஊழலுக்கு எதிரான கட்சியின் தேசிய தலைவரான எனக்குத் தேர்தல் பணிகள் அதிகம் இருப்பதால், காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்க எனக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு கார், நீதிமன்ற அனுமதியை வாங்கிக் கொடுக்கும்பட்சத்தில் வழக்கை விசாரித்துவரும் நீதிபதி சத்யநாராயணன் முன்பு தான் நேரில் முன்னிலையாகத் தயாராக இருப்பதாகவும், தன்னைக் கைதுசெய்ய வேண்டும் என்றாலும் கைதுசெய்யலாம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details