அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனோ பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாமிடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழு வீச்சில் கரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மக்களை முழுமையாகக் காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.
ஆனால் அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளையும் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கரோனா மரணங்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன. சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் திடீரென உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றன.
இத்தகைய மரணங்களிலிருந்து பாடம் கற்க வேண்டியதும் கட்டாயமாகிறது. மேலும் சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு வீடாகச் சென்று கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கரோனா பாதிப்பை அரை மணி நேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.
தொடக்கத்திலிருந்தே மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.