தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதைப்பொருள் கடத்தல்: கூரியர், பார்சல் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடும், எச்சரிக்கையும்! - சென்னை மாவட்ட செய்திகள்

கூரியர், பார்சலில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அவற்றின் நிறுவன உரிமையாளர்களுக்கு காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Drive against Drug Operation in Chennai
Drive against Drug Operation in Chennai

By

Published : Dec 3, 2021, 10:01 AM IST

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைத் தடுப்பதற்காகச் சென்னை காவல் துறை சார்பில் (Drive against Drug Operation in Chennai) போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இயக்கம் தொடங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறிப்பாக, இளைஞர்கள் மருந்தகங்களில் போதை மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி, அதைப் பயன்படுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து, மருந்தக உரிமையாளர்களுடன் காவல் துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

அதைத் தொடர்ந்து, கூரியர், பார்சல் சேவை மூலமாகப் போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் உள்ளூர், உள்நாட்டு, பன்னாட்டு கூரியர் பார்சல் சேவை நிறுவன நிர்வாக அலுவலர்களுடன், நேற்று (டிசம்பர் 2) கூடுதல் ஆணையர்கள் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கூரியர், பார்சல் நிறுவனங்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஸ்கேனர் கருவிகள் கட்டாயம்

பார்சல்கள் பதிவு செய்யும்போது அனுப்புநர், பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே பார்சல்கள் பதிவுசெய்யப்பட வேண்டும். உள்நாட்டு, பன்னாட்டு பார்சல் அனுப்பும்போது, அனுப்புநரின் புகைப்படத்துடன் கூடிய விவரங்களைக் கட்டாயமாகப் பதிவுசெய்ய வேண்டும்.

மேலும் பதிவுசெய்யப்பட்ட விவரங்களை இ-பதிவு மூலமாகக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பதிவுசெய்து தேவையின்போது, அந்த விவரங்களைக் காவல் துறைக்கு வழங்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளனர். கூரியர் மைய அலுவலகங்களில் ஸ்கேனர் கருவிகளைக் கட்டாயம் வைத்திருந்து பார்சல்களில் போதைப்பொருள்கள் போன்ற சட்டவிரோதப் பொருள்கள் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

காவல் துறைக்குத் தகவல் தர வேண்டும்

அனைத்து கூரியர், பார்சல் நிறுவனங்களில் உள்புறமும், வெளிப்புறமும் கட்டாயமாக சிசிடிவி பொருத்திருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 30 நாள்கள் சிசிடிவி பதிவுகள் இருக்கும்படி பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பார்சல்கள் டெலிவரி செய்யும்போது பெறுநர் பெயர் கொண்டவரே பார்சலைப் பெறுகிறாரா எனச் சரிபார்த்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

விமானம், பேருந்து, ரயில் வழியாகப் பார்சல்கள் அனுப்பப்படுவதால் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், பார்சல்களில் சந்தேகப்படும்படியான பொருள்கள், சட்டவிரோதப் பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தால் உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவுரைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் எனவும், காவல் துறையின் அறிவுரைகளை மீறி சட்டவிரோதப் பொருள்களை அனுப்ப துணைபுரியும் கூரியர், பார்சல் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயதினை உயர்த்தி அரசாணை வெளியீடு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details