தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது - முதலமைச்சர் பெருமிதம்!

சென்னை: 7, 5% உள் இட ஒதுக்கீட்டுக்கு யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனவும், மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கவே இச்சட்டத்தை கொண்டு வந்ததாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

speech
speech

By

Published : Nov 18, 2020, 7:15 PM IST

Updated : Nov 19, 2020, 10:38 AM IST

நேரு விளையாட்டு அரங்கில் இன்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது கோட், ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு அவர் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ தமிழக வரலாற்றில் இந்த நாள் ஒரு பொன்நாள். அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள்.

கொள்கை அளவிலும், பிரதமரை பலமுறை சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும் அரசு நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவது மிகவும் குறைந்து விட்டது. திறமையானவர்களாக இருந்தும், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான வசதியும், வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதனால், அவர்கள் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண்கள் பெற இயலாத சூழல் நிலவுகிறது.

கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தந்தை

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் 8,41,251 பேரில், 3,44,485 பேர் அரசுப்பள்ளி மாணவர்களே ஆவர். ஆனால், அவர்களில் வெறும் 6 பேருக்குதான் கடந்தாண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை மாற்ற வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் தான், நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரையின்படி, 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளோம். பல தடைகளை தாண்டி, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு இன்று நனவாகியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 227 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் 86 இடங்களும் என மொத்தம், 7.5% ஒதுக்கீட்டால் 313 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கிடைக்கும். இதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 80 இடங்களும் என மொத்தம் 92 இடங்கள் கிடைக்கும். இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும்.

அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது - முதலமைச்சர் பெருமிதம்!

மேலும், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழலை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாத வகையில், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 7.5% இடஒதுக்கீடு வேண்டி எதிர்க்கட்சிகளோ, பொதுமக்களோ யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றபோது அவர்கள், ஏழைகளின் வலியை உணர்ந்து எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்வார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் இக்கனவை நனவாக்கியுள்ளது அரசு “ என்றார்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ

Last Updated : Nov 19, 2020, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details