சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திமுகவின் தேர்தலுக்கு முந்தைய திருச்சி மாநாட்டில், கல்வி, சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக உயர்த்தப்படும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டது.
இது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொது மக்களிடம் நல் வரவேற்பைப் பெற்றது. திமுகவின் வெற்றிக்கு அந்த உறுதி மொழியும் ஒரு காரணமாகும். எனவே, தற்பொழுது பதவி ஏற்றுள்ள திமுகவின் புதிய அரசுக் கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திட வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி:
மருத்துவத்திற்கு ஆகும் செலவில் பெரும் பகுதி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கும் ஆகின்றது. இதனால் அரசுக்கும், தனிநபர்களுக்கும் பெரும் செலவு ஏற்படுகிறது.
தமிழ்நாடு அரசே பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் அனைத்து மருந்துகளையும், மருத்துவக் கருவிகளையும், அறுவை சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்திட வேண்டும்.
மாத்திரைகள், ஊசிகள், சிரெஞ்சுகள், குளுகோஸ் பாட்டில்கள், கையுறைகள், முகக்கவசங்கள், கிருமி நாசினி, நுண்ணுயிரி கொல்லி மருந்துகள், புற்று நோய்க்கான மருந்துகள் போன்றவற்றை முடிந்த அளவில் அரசே பொதுத்துறை நிறுவனம் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.
குறைந்த விலையில் மருந்துகள்:
இதன் மூலம் குறைந்த விலையில் தரமான மருந்துகளை, மருத்துவ உபகரணங்களைத் தங்கு தடையின்றி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க முடியும். மிகக்குறைவான விலையில் பொதுமக்களுக்கு வெளிச் சந்தையில் விற்கவும் முடியும். தமிழ்நாடு அரசு தனியார் துறைக்கு விற்று வருவாய் ஈட்டவும் முடியும்.
கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன் தயாரிப்புப் பணிகளையும் அரசு முடுக்கிவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்திட கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும். தொற்று ஆராய்ச்சி மையம், மரபணு வரிசை ஆய்வகம் போன்றவற்றை உடனடியாகத் தமிழ்நாடு அரசே தொடங்கவும் மருத்துவ ஆய்வுகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் குழந்தைகளிடம் வளர்ச்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது. குழந்தை, இளம் வயது திருமணம், இளம் வயது கர்ப்பம், பெண்களிடையே ரத்த சோகை ஆகியவை அதிகமாக உள்ளது. இவற்றை விரைவாகச் சரி செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கரோனா நிதி கிடைக்கவில்லை:
கரோனா காலத்தில் பணியிலிருந்து தொற்றுக்கு ஆளாகி இறந்த அனைத்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு நிதி உதவி ரூ.25 லட்சத்தை புதிய அரசு வழங்கியுள்ளது வரவேற்புக்குரியது.
இதில் விடுபட்டுப்போன குடும்பங்களுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்திட வேண்டும். அரசு அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட கரோனா ஊக்கத்தொகையினை அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும்.
ராஜா முத்தையா மாணவர்களின் நிலை:
பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக்கால உதவி ஊதியத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் உயர்த்தி அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்புக்குரியது.
அதேபோல் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகப் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் துணை சுகாதார நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும்.
காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு:
சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப் படுத்துவதால் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெறுகின்றன. பல்வேறு துறைகளிடையே போட்டி, பொறாமை, ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.
ஏழை நோயாளிகள் தங்கு தடையின்றி சிகிச்சை பெறுவதிலும் பல சிக்கல்கள், காலதாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான நிதியை அரசே நேரடியாக வழங்கி, அனைத்து சேவைகளையும் முழுமையாக இலவசமாக்கிட வேண்டும்.
காப்பீடுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக பொதுச் சுகாதாரத்துறையை மாற்றுவது மக்கள் நலன்களுக்கு எதிரானதாக அமைந்துவிடும். அனைத்து தடுப்பூசிகளையும் வழங்கும் திட்டத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்துவது வரவேற்புக்குரியது.