தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களை அதிகரிக்க அரசின் நடவடிக்கை அவசியம்'

அரசுப்பள்ளி மாணாக்கர் நீட் தேர்விற்கு குறைந்த அளவில் விண்ணப்பித்திருப்பது கவலை அளிப்பதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் இரவீந்திரநாத்
டாக்டர் இரவீந்திரநாத்

By

Published : Aug 7, 2021, 6:37 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர் கடந்த ஆண்டு ஆறாயிரத்து 692 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் ஆயிரத்து 633 மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்விற்கு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணாக்கர் ஆறாயிரத்து 412 பேர் மட்டுமே ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. இது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். விண்ணப்பித்துள்ள மாணாக்கரிலும் பட்டியலினத்தவர், பட்டியல் பழங்குடியினர், அருந்ததியர் சமூகங்களைச் சேர்ந்தோர் குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

கவலை அளிக்கும் அம்சம்

சில தினங்களுக்கு முன் வரை எஸ்.சி. மாணாக்கர் 850 பேரும், எஸ்.சி.(ஏ) பிரிவைச் சேர்ந்தவர்கள் 129 பேரும், எஸ்.டி. பிரிவு மாணாக்கர் வெறும் 95 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அரசுப் பள்ளி மாணாக்கருக்கு மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக்கல்லூரி, ஆயுஷ் படிப்புகளிலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் நிலையில் அந்த இடங்கள் அனைத்தும் நிரம்ப வேண்டுமெனில் ஏராளமான அரசுப்பள்ளி மாணாக்கர் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பது அவசியம். அதிக அளவில் நீட் தேர்வு எழுவதும், தேர்ச்சிப் பெறுவதும் அவசியம்.

பொதுவாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவரில் பலர் தேர்வு எழுதுவது இல்லை என்பதும் வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது. ஆனால், இப்பொழுது விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. அதுவும் எஸ்.சி., எஸ்.டி. மாணாக்கர் குறைந்த அளவில் விண்ணப்பித்துள்ளதால், அவர்களுக்கான இடங்களை அரசுப் பள்ளிகளில் பயிலும், அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைகூட ஏற்படலாம்.

அரசு நடவடிக்கை தேவை

அரசுப்பள்ளி மாணாக்கரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், பொருளாதாரப் பிரச்சனைகளும், நீட் தேர்வைப் பற்றிய அச்சமும் குறைவான அளவில் விண்ணப்பிப்பதற்குக் காரணமாக இருக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் 10ஆம் தேதிவரை மட்டுமே உள்ளதால் தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்திட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணாக்கர் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்விற்கு அரசுப் பள்ளிகள் மூலம் விண்ணப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் நீட் தேர்விற்கான பயிற்சியைத் தீவிரமாக வழங்குவதற்கும் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

அரசுப்பள்ளி மாணாக்கருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தால் நல்ல பலன் கிடைத்துள்ளதால் இத்திட்டத்தை நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றாலும் தொடர வேண்டும் எனச் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!

ABOUT THE AUTHOR

...view details