தமிழ்நாடு முழுவதும் இன்று 20வது மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெற்ற நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 10.17 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்தார்.
அதில் 2.55 லட்சம் நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 7. 27 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செய்யப்பட்டுள்ளது என்றும் 68% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 77 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2711 ஊராட்சிகளிலும் 24 நகராட்சிகளிலும் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது.தொற்று குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது தொடர்ந்து அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கன்னியாகுமரி, மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நோய்த்தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது எனினும் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நோய்த்தொற்றின் வேகம் குறையத் தொடங்கும் எனவும் கூறினார். மேலும் மகாராஷ்டிராவில் ஏற்றம் தொடங்கிய மூன்றாவது வாரத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது.