இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பிரதமர் மோடியை மட்டுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரையும் சந்தித்து, மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும், பிற அனுமதிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். எடியூரப்பாவின் இந்தக் கோரிக்கை தமிழக உழவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் எந்தக் கோரிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. ஆனால், 2018 ஆம் ஆண்டு அப்போதைய குமாரசாமி அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.5,912 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அத்துடன் அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.