தேசிய, சர்வதேச பெண்கள் அமைப்புகள், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றின் முயற்சியால், 2005 ஆம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு, 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு, வசிப்புரிமை, பாதுகாப்பு கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், இச்சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை ரத்து செய்யக்கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில், பாதுகாப்பு மீறல் மட்டுமே பிணையில் வெளிவர முடியாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், உரிமையியல் சம்பந்தப்பட்டது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறி, விசாரணைக்கு உகந்ததற்ற இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக கூறினார்.