சென்னை: தங்களை மத்திய காவல் துறையினர் எனக்கூறிக்கொண்டு 3800 டாலரைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை, 200 சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்து காவல் துறையினர் பிடித்துள்ளனர்.
சோமாலியா நாட்டைச் சேர்ந்த அலி அகமத் முகமத் (61) என்பவர் அந்நாட்டில் தனியார் பள்ளி முதல்வராக இருந்துவருகிறார். கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக சென்னை வந்த அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கிவருகிறார்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக வழிகாட்டியான அப்துல் என்பவருடன் அலி நுங்கம்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு மாடல் பள்ளி சாலை கார்ப்பரேஷன் பள்ளி எதிரே நடந்துவந்தார்.
அப்போது அவ்வழியாக இரண்டு காரில் வந்த மூவர் வழிமறித்து மத்திய காவல் துறையினர் எனத் தங்களைக் கூறிக்கொண்டு சோதனை செய்ய வேண்டும் என பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அலி தனது கைப்பையிலிருந்து ஆவணங்களோடு பர்சையும் எடுத்துள்ளார், கண் இமைக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது பர்சில் வைத்திருந்த அமெரிக்க டாலர் 3800 (இந்திய மதிப்பில் ரூ.2,77,000) பணத்தைப் பறித்து தப்பியோடி உள்ளனர்.
இது தொடர்பாக அலி ஆயிரம் விளக்கு காவல் துறையினரிடம் புகார் அளித்தபோது அவர்கள் போலி காவலர்கள் எனத் தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தேடிவந்தனர்.
சிசிடிவியில் பதிவான முக அடையாளங்கள் வட மாநிலத்தவர்போல் இருந்தது. இதே பாணியில் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்தான பழைய குற்றவாளியின் அடையாளங்களைத் தேடியுள்ளனர். சிசிடிவியில் பதிவான அடையாளங்களில் உள்ள நபர்கள் குறித்து அனைத்து விடுதி உரிமையாளர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.